ஸ்டான்லி குப்ரிக். இவரைப் பற்றி எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. இவரது படங்களே போதும் இவரைப்பற்றிச் சொல்ல. உலக சினிமா மேதைகளில் ஒருவர். அவரது திரைப்பட வாழ்க்கையின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு மிகவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான ஒரு படமே இந்த ‘Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb’ என்ற படம். இப்படம், இன்றும் ஹாலிவுட்டின் மிக முக்கியமான ஒரு அரசியல் படமாகக் கருதப்படுகிறது. இது, Black Comedy வகையைச் சேர்ந்த படம். அதாவது, சமூகத்தில் நிகழும் அவலங்களுக்கு, என்ன காரணம் என்று யோசித்துக்கொண்டே போய், நமது அரசியலும், அரசியல்வாதிகளுமே காரணம் என்று சொல்லி, அவர்களைக் கிண்டல் செய்து எடுக்கப்பட்ட ஒரு படமாகும் இது.
இப்படம் வெளிவந்த வருடத்தைக் கவனியுங்கள். 1964. உலக வல்லரசுகள் ஒருவரையொருவர் அழிக்க, அணுகுண்டுகளை முழுமுனைப்புடன் தயாரித்துக்கொண்டிருந்த காலம். அதிலும், அமெரிக்காவும் ரஷ்யாவும் பனிப்போரில் ஈடுபட்டிருந்த காலம். இப்படத்தைப்பற்றி ஒரு உதாரணத்துக்குச் சொல்லவேண்டும் என்றால், இப்பொழுது, நம் இந்தியாவில் பல அணுகுண்டுகள் பல்வேறு மையங்களில், பாகிஸ்தானை நோக்கிக் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த ராணுவ மையங்களில், ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்த ஒரு மேலதிகாரி, திடீரென்று பைத்தியம் பிடித்து, அவரிடம் உள்ள அணு ஆயுதங்களை பாகிஸ்தானின் மேல் ஏவிவிட்டுவிடுகிறார்; இன்னும் சிறிது நேரத்தில் அவை வெடிக்கப்போகின்றன. அப்பொழுது, இந்த அதிகாரி செய்த முட்டாள்தனத்தின் முழு விளைவும் நம் பிரதமர் மேல் விழுகிறது. அவர் இந்தப் பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே இப்படத்தின் கதை என்று வைத்துக்கொள்ளலாம். இந்தியா, பாகிஸ்தானுக்குப் பதிலாக அமெரிக்கா, ரஷ்யா.
ஜாக் ரிப்பர், ஒரு ராணுவ ஜெனரல். திடீரென்று ஒருநாள், கம்யூனிஸ்டுகள் மேல் உள்ள வெறுப்பால், தன்னிடம் உள்ள அனைத்து அணு ஆயுத விமானங்களையும், ரஷ்யாவின் மேல் ஏவி விட்டு விடுகிறார். காரணம்: கம்யூனிஸ்டுகளால் தான், தண்ணீரில் ஃப்ளூரைட் கலக்கப்பட்டு, அதனை நாம் குடிப்பதனால், நமது உடலில் உள்ள திரவங்கள் கெட்டுவிடுகின்றன என்பதை அவர் தீவிரமாக நம்புவதுதான் (???!!!). ஏவிவிட்டவர், ஆபத்துக்காலத்தில் பின்பற்ற வேண்டிய ‘Wing Attack R’ என்ற ஒரு ஆணையைப் பிறப்பித்து விடுகிறார். இதனால், அந்த விமானங்களை, இவரிடம் உள்ள ஒரு ரகசியக் குறியீட்டின் மூலம் மட்டுமே திரும்ப அழைக்க முடியும். அமெரிக்க ஜனாதிபதியே நினைத்தாலும், ஒன்றும் செய்ய இயலாது.
விமானங்களை ஏவிவிட்டபின், ரிப்பர் அவசரகால உத்தரவைப் பிறப்பித்து, தனது அறையினுள் சென்று, பூட்டிக்கொண்டு விடுகிறார். அவருடன் சேர்ந்து மாட்டிக்கொள்வது, அவரது எக்ஸிக்யூட்டிவ் ஆஃபீசர் மேண்ட்ரேக். இந்த உத்தரவினால், முகாமை நெருங்கும் எந்த சக்தியாயினும் சரி, சுடப்படும்.
இத்தகைய ஒரு நெருக்கடி, அமெரிக்க ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்படுகிறது. பெண்டகனில் இருக்கும் ‘பக் டர்ஜிட்ஸன்’ என்ற ஜெனரல், இதனால் விளையும் நன்மை தீமைகளைப் பற்றி, ஜனாதிபதியிடம் விளக்குகிறார். நன்மை: ரஷ்யாவைப் பூண்டோடும் வெங்காயத்தோடும் (நன்றி: சுஜாதா) அழித்துவிடுவது. தீமை: ரஷ்யா திருப்பித்தாக்கினால், பல மில்லியன் அமெரிக்கர்கள் இறக்க நேரிடும்.
ஆனால், ஜனாதிபதிக்கு இதில் விருப்பமில்லை. அவர், ரஷ்ய தூதரை வரவழைத்து, அவரிடம் நிலைமையை விளக்குகிறார். ஒரே வழிதான் உள்ளது என்று சொல்லும் ஜனாதிபதி, ரஷ்யாவிற்கு, தாக்கவரும் விமானங்கள் பற்றித் தகவல் கொடுத்து, அவற்றை அழிப்பதே அந்த வழி எனக்கூறி, ரஷ்ய உயரதிகாரியிடம் இந்த தூதரைப் பேசச் சொல்கிறார். அவரிடம் பிறகு தானே பேசும் ஜனாதிபதி, அவர் பயங்கரமாக சரக்கடித்துவிட்டு, படு மப்பில் இருப்பதைத் தெரிந்துகொள்கிறார். இந்த இடத்தில் இருவருக்கும் இடையில் வரும் உரையாடல், நகைச்சுவையின் உச்சம் என்று சொல்லிவிடலாம்.
அந்த தூதர், திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப்போடுகிறார். தங்களிடம் ஒரு அபாயகரமான கருவி இருப்பதாகவும், அக்கருவியின் மேல் ஒரு சிறிய குண்டு விழுந்தாலும், உலகையே அழிக்கக்கூடிய ஒரு கதிரியக்கத்தை அது உற்பத்தி செய்யும் என்றும், அடுத்த 93 வருடங்களில், உலகம் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் சொல்கிறார்.
ஜனாதிபதிக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியாமல், கடைசி முயற்சியாக, ஒரு படைப்பிரிவை ஏவிவிட்டு, இதற்கெல்லாம் காரணமான ஜாக் ரிப்பரைப் பிடித்துவரச் சொல்கிறார். அவரிடம் தான் அந்த ரகசியக்குறியீடு இருப்பதனால், அதனை வைத்து விமானங்களைத் திருப்பி அழைத்துவிடலாம் என்பது அவரது யோசனை.
இதன்பின் என்ன நடந்தது? ரஷ்யா அழிக்கப்பட்டதா? அல்லது விமானங்கள் திரும்பப்பெறப்பட்டனவா? ஜாக் ரிப்பர் என்ன ஆனார்? எல்லாக் கேள்விகளுக்கும், இந்தப்படத்தைப் பாருங்கள்.
இப்படம் வெளிவந்த காலத்தில், ஒரு மிக முக்கியமான அரசியல் படமாக (இப்போதும்தான்) கருதப்பட்ட இப்படத்துக்கு, பல விருதுகள் கிடைத்தன. கறுப்பு-வெள்ளைப் படமான இதிலும், குப்ரிக் கேமராவில் புகுந்து விளையாடி இருப்பார். கொஞ்சம் கூட போரே அடிக்காமல், ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அதே விறுவிறுப்புடன் செல்லும் இந்தப்படம், உலக அரசியல் தலைவர்களை, வெகுவாகப் பகடி செய்கிறது. பொறுப்பே இல்லாமல், அணுஆயுதங்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும் இந்தத் தலைவர்கள் நினைத்தால், ஒரு சிறிய உத்தரவினால், இந்த உலகையே அழித்து விட முடியும் என்பதை இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
முக்கியமாக, இப்படத்தில் வரும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லவ் என்ற விஞ்ஞானி, அமெரிக்க ஜனாதிபதியிடம், குண்டு வெடித்தால், அதன்பின் செய்ய்ய வேண்டிய பல்வேறு சாத்தியக்கூறுகளைப் பற்றி உரையாடும் காட்சி, கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதில் அவர், ஜனாதிபதியை, ஹிட்லர் என்றே உணர்ச்சி வேகத்தில் நினைத்துக்கொண்டு விடுகிறார். அவரது கை, அவரை மீறி, சல்யூட் செய்வதற்கு மேலெழும்புகிறது. அவருமே, அடிக்கடி, தன்னைமீறி, ‘ஃஃப்யூரர்’ என்றே ஜனாதி பதியை அழைத்து விடுகிறார் (ஃப்யூரர் என்பது ஜெர்மனியில் ஹிட்லர் அழைக்கப்படும் பெயர்).
குப்ரிக்கின் முக்கியமான படங்களில் ஒன்றாகக் கருதப்படும் இப்படம், மிகவும் சுவாரஸ்யமான ஒரு படம். இப்படத்துடன், புத்தாண்டை எதிர்நோக்குவோம். வரும் ஆண்டு, உலகமக்கள் அனைவருக்கும் ஒரு அருமையான ஆண்டாக இருக்கட்டும்.
நண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.
இப்படத்தின் டிரைலர் இங்கே.
பி. கு – இரவு, பயணம் செய்ய்ய இருப்பதால், பின்னூட்டங்களுக்கு மறுமொழி, நாளை இடப்படும்