மிஷ்கினின் பிசாசு பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர் ‘Auteur‘ என்ற பதத்தைப் பற்றிப் பார்த்தே ஆகவேண்டும். உடனேயே படிப்பவர்கள் தெறித்து ஓடாமல் மேலும் கவனித்தால் தமிழில் உலக சினிமாக்கள் வளர்வதற்குத் தேவையானவை பற்றிப் படிக்கலாம். இல்லை – கமர்ஷியல் மசாலாக்கள் மட்டும்தான் தேவை என்பவர்கள் நேரடியாக இந்தக் கட்டுரையின் கீழ்பாதிக்குப் போய்விடலாம்.
‘Auteur’ என்பதை ஏற்கெனவே Wolf of Wall Street விமர்சனத்தில் பார்த்திருக்கிறோம். ஸ்கார்ஸேஸி ஒரு ஆட்டெர். இந்த வார்த்தையை ‘ஆட்டெர்’ என்றும் ’ஓத்தர்’(ஃப்ரெஞ்ச்) என்றும் சொல்லலாம். ஒரு எழுத்தாளர் ஒரு நாவலை எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது நடையையும் அவரது சமூக நோக்கத்தையும் அவரது பல படைப்புகளிலும் தனியாகக் கண்டுபிடித்துவிடமுடியும். தனது படைப்புகளின் வழியே தான் எப்படி தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைக் கவனிக்கிறோம் என்பதைப் பதிப்பகங்கள், பக்கங்கள், விலைகள் போன்றவைகளிலெல்லாம் கவனம் செலுத்தாமல்/பாதிக்கப்படாமல் முத்திரை போலப் பதிப்பவரே ஆட்டெர். அவர் படங்களிலோ அல்லது எழுத்துகளிலோ ஒரே ஒரு பக்கம்/ஒரு காட்சியைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் இன்னார் என்பதை விளக்கமாகச் சொல்லிவிட முடியும். அந்த வகையில் டாரண்டினோ, ரித்விக் கடக், சத்யஜித் ரே, ஹிட்ச்காக், ஸான் ரென்வா (Jean Renoir), ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ (Francois Truffaut), லார்ஸ் வான் ட்ரையர், ஃபெலினி, டேவிட் லின்ச், ஆந்த்தோனியோனி, கிம் கி டுக், கிம் ஜீ வூன், போங் ஜூன் ஹோ, தகாஷி கிடானோ போன்று பலரும் ஆட்டெர்கள்தான். இவர்களது படங்களில் எந்தக் காட்சியைப் பார்த்தாலும் அது இவர்கள் இயக்கியது என்பதைச் சொல்லிவிடமுடியும். இதில் ஒரு பாடபேதம் என்னவென்றால், ஆட்டெர்கள் இயக்குவது மட்டுமல்லாமல் படத்தை எழுதுவதும் முக்கியம் என்றும் ஒரு பள்ளி இருக்கிறது. த்ரூஃபோதான் இந்தப் பள்ளியின் நிறுவனர். இதைப்பற்றித் தனியாக விரிவாகப் பார்ப்போம். இப்போது ஆட்டெர் என்றால் என்ன என்பதே முக்கியம். ஆட்டெர் பற்றி என்ன என்று தெரிய மேலே கொடுக்கப்பட்டுள்ளவர்களின் படங்களைப் பார்த்திருப்பதும், த்ரூஃபோ போன்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதைத் தெரிந்திருப்பதும் அவசியம்.
அடுத்ததாக, தமிழில் உலகப்படங்கள் இல்லை என்று பல கூக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஏன் என்று கவனித்தால், கமர்ஷியல் படங்களே இங்கே முக்கியம். பணம் சம்பாதிப்பது ஒன்றே லட்சியம். அப்படி இருக்கும் பட்சத்தில் தமிழில் உலகப்படங்கள் வர வாய்ப்பே இல்லை. கூடவே, எந்த இயக்குநருக்கும் தனிப்பட்ட சமூகப் பார்வை அவசியம். சமூகப்பார்வை உலகப்படங்கள் பார்த்தால் மட்டும் வந்துவிடாது. இலக்கியங்கள் படிக்கவேண்டும். காமன் சென்ஸ் வேண்டும். உலகின் burning issues பற்றியும், அதனால் பாதிக்கப்படும்/கொத்துக்கொத்தாக செத்துவிழும் மனிதர்கள் பற்றியும் empathy வேண்டும். இன்னும் முக்கியமாக, மனிதனை மனிதனாகப் பார்க்கும் பார்வை வேண்டும். இதெல்லாம் ஐரோப்பா, கொரியா போன்ற இடங்களைச் சேர்ந்த இயக்குநர்களுக்கு இயல்பாகவே வருகிறது. எனவே அங்கே ஆட்டெர்கள் அதிகம். அவர்கள் மூலமாக உலகப்படங்களும் அதிகம்.
இனி, தற்காலத் தமிழ்ப்பட சூழலுக்கு வந்தால், இன்றைய தேதியில் ஆட்டெர் என்ற பதத்துக்கு மிஷ்கினே முதல் ஆள். ஆனால் மிஷ்கின் முழுமையான ஆட்டெர் அல்ல. அவர் ஒரு flawed auteur. நல்ல இயக்குநர் என்ற இடத்துக்கு ஏணியில் ஏறிக்கொண்டிருக்கிறார் என்று அவசியம் சொல்வேன். அப்படிச் சொல்வதற்குப் பிசாசு வரை அவரது பயணமே காரணம். இன்னும் நான்கு படங்கள் போதும்; மிஷ்கின் ஒரு முழுமையான உலக இயக்குநர் ஆகிவிடுவார் என்பது என் கருத்து.
தமிழில் இருக்கும் ஒரு இயக்குநரை உலக இயக்குநர் ஆகப்போகிறார் என்று சொன்னால் உடனே ஒரு கும்பல் எள்ளி நகையாடத் தயாராக இருக்கும். ஏன் அப்படி ஆகக்கூடாது? இந்த ஸ்டேட்மெண்ட்டைப் பார்த்து சிரிப்பதற்கு முன்னர் போய் ஆட்டெர் என்றால் என்ன; உலக சினிமா என்ன சொல்கிறது என்பதையெல்லாம் அனுபவித்துத் தயாராக வந்தால்தான் அவர்கள் முதலில் சிரிக்கவே ஆரம்பிக்கலாம். ஒரு விஷயம் என்னவென்றே தெரியாமல் இருப்பவர்களுடன் பேசவே முடியாது.
‘பிசாசு’ அவசியம் ஒரு அருமையான படம். இந்தப் படம் ஆரம்பித்த அரைமணி நேரத்துக்குள்ளேயே 3 Iron மற்றும் Bittersweet Life படங்களைப் பார்க்கையில் எப்படிப்பட்ட அனுபவம் கிடைத்ததோ அதன் சில துளிகள் தென்பட ஆரம்பித்தன. முழுமையாக அல்ல; அதனால்தான் மிஷ்கினை flawed auteur என்று சொன்னேன். இன்னும் அவர் ஒரு முழுமையான இயக்குநர் ஆகவில்லை. அதற்கு இன்னும் சில படங்கள் பிடிக்கும். ஆனால் அந்தப் பயணத்தில் குறிப்பிடத்தக்க தூரம் சென்றுவிட்டார் என்றுதான் சொல்வேன் (முழுமையான இயக்குநர் என்றால் தமிழில் இல்லை. உலகின் எந்த நாட்டிலும் எவரது படங்களை மொழி வித்தியாசம் இல்லாமல் ரசிக்கிறார்களோ அவரே முழுமையான இயக்குநர்). ‘பிசாசு’ ஒரு பேய்ப்படம் அல்ல. உணர்வுரீதியில் அமைந்த ஒரு நல்ல படம். நம்மூரில் பேய் என்றாலே சில க்ளிஷேக்கள் உள்ளன. பேய் ஏன் அதற்கு நேர் எதிராக இருக்கக்கூடாது? பேய் என்றால் கொடூரமாகத்தான் இருக்கவேண்டுமா? 3 Iron படத்தில் கதாநாயகி ஸுன் – ஹ்வா எப்படி நாயகன் டே-சுக்கின் பின்னாலேயே சென்றுவிடுகிறாள்? இத்தனைக்கும் டே-சுக் அவள் வீடுபுகுந்து அங்கே வாழ வந்திருப்பவன். ஆனால் ஒரு பேச்சு கூட பேசாமல் அவனுடனேயே அவள் சென்றுவிடுகிறாள் என்பதைப் படம் பார்க்கையில் கவனிக்கலாம். அதில் வசனங்கள் மிகக்குறைவு. ஆனாலும் அந்த இரண்டு பாத்திரங்களுக்கும் இடையேயான அன்பும் காதலும் பிணைப்பும் எளிதில் யார் வேண்டுமானாலும் புரிந்துகொண்டுவிடலாம். ஆனால் அதைப் புரிந்துகொள்ளக் குறைந்தபட்சம் கிம் கி டுக் யார் என்றாவது தெரியவேண்டும். அப்படித்தான் பிசாசும். ’இது ஒரு வழக்கமான தமிழ் மசாலா பேய்ப்படம்’ என்று நினைத்துக்கொண்டு பார்த்தால் இந்தப் படம் உங்களுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று பார்த்தால் அவசியம் பிடிக்கும்.
படத்தின் பெரும்பங்கை இசை எடுத்துக்கொள்கிறது. அரோல் கொரேலி என்ற புதிய இளைஞர் இசையமைத்திருக்கிறார். அரோல் கொரேலியாகட்டும்; இளையராஜாவாகட்டும்; சுந்தர் சி பாபுவாகட்டும் (அஞ்சாதே); கேவாகட்டும் (யுத்தம் செய்); இந்த எல்லாப் படங்களையும் கவனித்தால், இசையை மட்டும் ஒலிக்க வைத்தாலே அது மிஷ்கின் படம் என்று யாராலும் உடனேயே சொல்லிவிடமுடியும். அதுதான் ஒரு ஆட்டெரின் அடையாளம். யாராக இருந்தாலும் அங்கே அந்த இயக்குநரின் கையில் இருக்கும் ஒரு பேனாதான். அந்தப் பேனாவை வைத்துக்கொண்டு அந்த இயக்குநர் எழுதுவதுதான் எழுத்து. அப்படித்தான் மிஷ்கினின் எல்லாப் படங்களின் இசையுமே. (சென்ற வாரம் ஒரு நண்பருடன் இதைப் பேசிக்கொண்டிருக்கையில் அவருமே இதையே சொன்னது குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு இயக்குநர்). இந்தப் படத்திலும் அப்படியே. அவசியம் தனது படங்களின் இசையிலும் மிஷ்கின் முத்திரை பதிக்கத் துவங்கியுள்ளார். ஆனாலும் அதில் குறைகள் இல்லாமல் இல்லை. படத்தின் இடைவேளைக்கு முன்னால் வரும் லிஃப்ட் சீக்வென்ஸில் இசை மிகவும் அதிகம். அதேபோல் வசனங்களிலும் காட்சிகளிலும் என்ன சொல்லப்படுகிறதோ அதை இசையும் தனியாக சொல்லப்பார்க்கிறது. அது கூறியது கூறல். ஒரே விஷயத்தை இருமுறை சொல்வது. அது நன்றாகத் தெரியவும் செய்கிறது. அடுத்த சில படங்களில் இது அவசியம் குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தைவிடவும் இதில் இசை நன்றாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதால் சொல்கிறேன். அந்த ரீதியில் பிட்டர்ஸ்வீட் லைஃப் தான் சிறந்த உதாரணம். இருந்தாலும் இசை கேட்கையில் அப்படம் ஆங்காங்கே நினைவு வந்தது.
படத்தின் எல்லாக் காட்சிகளிலும் உணர்வுகளே பெரும்பான்மையான இடத்தை எடுத்துக்கொள்கின்றன. ஒரு விபத்தில் பெண் ஒருத்தியைக் காப்பாற்றியவன், அந்த விபத்தில் இறந்த பெண்ணின் தந்தை, இறந்துபோன அந்தப் பெண் ஆகியோரே முக்கியமான பாத்திரங்கள். இவர்களுக்குள் சுழலும் உணர்வுகளே படம். பிசாசு இதில் பிசாசு இல்லை. ஒரு கதாபாத்திரமே. அப்படி ஒரு பாத்திரமாகப் பிசாசைக் காட்டி, அதன்மூலம் படத்தை நகர்த்துவது அவசியம் நல்ல முயற்சியே. இது ‘ஆனந்தபுரத்து வீடு’ படத்தின் இன்னொரு பாகம் என்றெல்லாம் இப்படத்தை நகைச்சுவை செய்ய எந்தத் தேவையும் இல்லை. அவர்களுக்கு நல்ல படம் என்றால் என்ன என்று தெரியாததையே இது காட்டுகிறது என்பது என் கருத்து. அது அவர்களின் பிரச்னையும் இல்லை. பொதுவான தமிழ் ரசிகனின் மனம் அப்படித்தான் இருக்கிறது.
படத்தில் மிஷ்கினின் எல்லாப் படங்களிலும் வரும் சில விஷயங்கள் வருகின்றன. டாஸ்மாக்கில் நீளும் கைகள் நளினமாக அசைவது, ஒவ்வொருவராக வந்து அடி வாங்குவது, அசையாமல் ஒரு காட்சியில் தலைகுனிந்து நிற்பது போன்றவை. மிஷ்கினுக்கு அவைகளை வைப்பதில் ஏதேனும் குறிப்பிட்ட காரணம் இருக்கலாம். ஆனால் அவை பொதுவாகப் படம் பார்க்கையில் உறுத்துகின்றன. நல்ல படம் ஒன்றில் திடீரென சில உறுத்தல்கள் வந்தால் எப்படி இருக்கும்? இவையும், இவைபோன்ற சில மிஷ்கின் சமாச்சாரங்களும்தான் மிஷ்கினை இன்னும் முழுமையான ஒரு இயக்குநர் ஆகாமல் தடுக்கின்றன. ஆனால் அவைகளும் ஒவ்வொன்றாக ஒவ்வொரு படமாகச் சரியாகிக்கொண்டிருக்கின்றன என்பதிலும் சந்தேகமில்லை. ஒருவேளை இதெல்லாம் தனது முத்திரைகள் (ஆட்டெர்) என்று மிஷ்கின் நினைப்பாரோ?
சித்திரம் பேசுதடி ஒரு சராசரிப் படமே. அதன்பின் வந்த அஞ்சாதே ஒரு தரமான ஆக்ஷன் படம். அதில் உணர்வுகளும் சமபங்கு வகித்தன. யுத்தம் செய் படத்தில் ஆக்ஷனை விட உணர்வுகள் மிக அதிகமாக இருந்தன. இருந்தாலும் அது மக்களுக்குப் பிடித்தது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் முற்றிலும் உணர்வுரீதியான படம். பிசாசும் அப்படியே. ஆனால் இதில் உணர்வுகள் சொல்லப்பட்டிருக்கும் விதம் மிஷ்கினின் மனதின் அடியாழத்திலிருந்தே வருகிறது. அதுதான் ஒரு ஆட்டெரின் அடையாளம்.
இதுபோன்ற முயற்சிகளுக்கு ஆதரவு தருவதன்மூலம் நமக்கு என்ன லாபம் என்றால், நல்ல படங்கள் எப்படி இருக்கும் என்று தமிழிலேயே நமக்குத் தெரிவதுதான். இந்தப் படத்திலேயே அவரது பிரத்யேக உருவாக்கமும் எண்ணங்களும் பிரதிபலிக்கத்தான் செய்கின்றன. இருப்பினும் இப்படிப்பட்ட படங்கள் வெற்றியடைந்தால் அவசியம் மிஷ்கின் இன்னும் சிறப்பான, முழுமையான படங்கள் எடுப்பார் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட படங்கள் வந்தால் இந்தியாவின் சார்பிலும் வருங்காலத்தில் தரமான உலகப்படங்கள் எடுக்கப்படும். அவைகளை மிஷ்கினே இன்னும் சில வருடங்களில் எடுக்கக்கூடும். இருந்தாலும், தான் ஒரு ஆட்டெர் என்று ஒருவேளை மிஷ்கின் நினைத்தால் அது அவருக்கு ஆபத்து. அவரை அது இழுத்துக் கீழே தள்ளிவிடும். மாறாக, இயல்பாகவே மிஷ்கின் இருந்துகொண்டிருந்தால் தமிழ் சினிமாவுக்கு அதைவிட நல்லது வேறு எதுவும் இல்லை.
ஒவ்வொரு படமாக சந்தேகமே இல்லாமல் மிஷ்கின் வளர்ந்துகொண்டிருக்கிறார். இன்னும் நான்கு படங்கள் போதும் – உலக அளவில் தரமான ஒரு படத்தை மிஷ்கின் கொடுக்க. இது என் கருத்து. நிகழ்ந்தால் மகிழ்வேன்.
சற்றேனும் வித்தியாசமான ஒரு அனுபவத்தைப் பெற அவசியம் இப்படத்தைப் பாருங்கள். பார்க்கையில் காட்சிகளின் பின்னால் இருக்கும் உணர்வுகளையும் அந்தக் காட்சிகளின் வாயிலாக என்ன சொல்லப்படுகிறது என்பதையும் கவனியுங்கள். அதுதான் உலக சினிமாக்களைக் கவனிப்பதன் சூட்சுமம்.
பி.கு – படத்தில் சிறுவன் மகேஷின் பந்தை உருட்டி அது சரியாக நிற்கையில் ‘The Shining’ என் மனதில் தோன்றியது.