கடந்த 2015 ஜூன் மாதம் ஜன்னலில் வெளியான கட்டுரை இது.
இந்தியாவையும் தமிழகத்தையும் பொறுத்தவரையில், வீடியோகேம்கள் என்பது எழுபதுகளில் தொலைக்காட்சியின் அறிமுகத்தோடு துவங்கியது. அப்போதைய காலகட்டத்தில் கன்ஸோல்கள் எனப்படும் தொலைக்காட்சியுடன் இணைக்கக்கூடிய பெட்டிகள் விற்கப்பட ஆரம்பித்தன. அவற்றுடன் இரண்டு கண்ட்ரோல்கள் இருக்கும். ஒவ்வொன்றையும் இந்தக் கன்ஸோல் எனப்படும் பிரதான பெட்டியுடன் (சற்றே பெரிய செட்டப் பாக்ஸ் போன்ற ஒரு வஸ்து) இணைக்கமுடியும். அந்தக் கண்ட்ரோல்களில் சில பொத்தான்கள் இருக்கும். இதன்பின் தனியே சந்தையில் விற்கும் வீடியோகேம் காஸெட்களை வாங்கிவந்து இந்தக் கன்ஸோலில் பொருத்தி, கன்ஸோலைத் தொலைக்காட்சியுடன் இணைத்தால் அதில் இருக்கும் கேம்கள் வரிசையாகக் காட்டப்பட, அவற்றில் தேவையான கேமை நமது கையில் இருக்கும் கண்ட்ரோலின் உதவியோடு தேர்வு செய்தால் கேம் தயார்.
எல்லாவற்றுக்கும் முன்னர் ’பாங்’ (Pong) என்ற விளையாட்டு எழுபதுகளின் முற்பகுதியில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டதுதான் வீடியோகேம்களின் துவக்கம். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பள்ளிப் பருவத்தைக் கழித்தவர்களுக்கு இது நினைவிருக்கலாம். ’நிண்டெண்டோ’ என்ற நிறுவனம்தான் இப்படிப்பட்ட கன்ஸோல்களில் உலகப் பிரசித்தம். இந்தக் காலகட்டம்தான் வீடியோகேம்களின் வரலாற்றில் பொற்காலம். இந்தக் கேம்களில் க்ராஃபிக்ஸ் என்றால் கிலோபைட் என்ன விலை என்று சொல்லும்படிதான் இருக்கும். மிகவும் அடிப்படையான க்ராஃபிக்ஸில் சூப்பர் மேரியோ, காண்ட்ரா, டாங்கி காங், டெட்ரிஸ், டக் ஹண்ட், ஐஸ் க்ளைம்பர், பின்பால், கால்ஃப், வைல்ட் கன்மேன், ப்ரோ ரெஸ்லிங், மேப்பி போன்ற கேம்களை அந்தச் சமயத்தில் வெறித்தனமாக விளையாடியவர்களில் நானும் ஒருவன். SEGA என்ற பெயரை இக்காலத்திய கேம் பிரியர்கள் மறக்கமுடியாது. ஜப்பானின் பிரபல வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனம் இது. இதுதான் இந்தியாவில் பல கன்ஸோல்களைப் புழக்கத்தில் விட்டது.
இந்தக் காலகட்டத்திலேயே கணினிகளில் விளையாடும் விளையாட்டுகளும் பிரபலம் அடைந்தன. தமிழகத்தின் பள்ளிகளில் ப்ரின்ஸ் ஆஃப் பெர்ஷியா என்ற DOS விளையாட்டை இக்கட்டுரையைப் படிப்பவர்கள் நினைவுகொள்ளக்கூடும். அரத மட்டமான க்ராஃபிக்ஸில் பிரம்மாண்டமான ஃப்ளாப்பி டிஸ்க்களில்தான் இந்த கேம் பரவியது. அப்போது துவங்கிய ப்ரின்ஸ் ஆஃப் பெர்ஷியா, இன்றுவரை பல வடிவங்களில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருப்பது உபரித்தகவல்.
தமிழகத்தின் சில பள்ளிகளில் மாணவர்கள் ப்ரின்ஸ் ஆஃப் பெர்ஷியாவைத் தடவித்தடவி விளையாடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் உலகம் முழுக்க இந்த வீடியோகேம்கள் வேறு பரிமாணங்கள் எடுத்துக்கொண்டிருந்தன. பிரபல விளையாட்டான மார்ட்டல் காம்பேட் (திரைப்படமாகவும் வந்தது) உலகம் முழுக்க ரசிகர்களை ஈர்த்தது இந்தக் காலகட்டத்தில்தான். Dune II (1992) என்ற உலகின் முதல் Real time Strategy கேம் இந்தச் சமயத்தில்தான் வெளியானது. பிற்காலத்திய ரியல் டைம் ஸ்ட்ராடெஜி கேம்களான ஏஜ் ஆஃப் எம்பையர்ஸ், ஸ்டார்க்ராஃப்ட், ரைஸ் ஆஃப் நேஷன்ஸ், ஏஜ் ஆஃப் மைதாலஜி போன்றவற்றை விளையாடியவர்களுக்கு இது ஜுஜுபி கேமாக இருந்திருக்கும். ஆனால் எதற்குமே ஒரு அடிப்படையான ஆரம்பம் இருக்கும் என்ற அடிப்படையில் இப்போது விளையாடப்படும் பல கேம் வகைகளின் துவக்கம் இந்தக் காலகட்டத்தில்தான் அமைந்தது.
Dune IIவுக்குப் பிறகு Alone in the Dark என்ற Survival Horror கேம் உருவானது. விடாமல் துரத்தும் பேய்களுக்கு/பிணங்களுக்கு/கொடூர உருவங்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டுத் தப்பிக்கும் கேம் வகை இது. த லாஸ்ட் ஆஃப் அஸ், ரெஸிடெண்ட் ஈவில் சீரீஸ், பையோஷாக், டூம் ஆகியவை இதன் உதாரணங்கள்.
போலவே அதிரடி கேம்களும் இச்சமயத்தில்தான் உருவாயின. அப்போதுதான் கணினிகளுக்குத் தேவையான 3D ஆக்ஸலரேட்டர் கார்ட்கள் உருவாக்கப்பட்டதால் (கணினியில் கேம்களைத் துல்லியமாக விளையாட உதவுவது) வீடியோ கேம்கள் இன்னும் அசுர வளர்ச்சி அடைந்தன. இதுதான் Age of Empires உருவான காலகட்டம். ஒரு மிகப்பெரிய காடு, அதில் இருக்கும் இரண்டு மூன்று மனிதர்கள் என்று துவங்கும் இந்த விளையாட்டில், இவர்களை வைத்துக்கொண்டு இன்னும் பல மனிதர்களை உருவாக்கி (கசமுச செய்யாமல்) ஒரு சிறிய கிராமத்தை இவர்களை வைத்துக்கொண்டு கட்டி, அங்கிருக்கும் மரங்கள், கனிமங்கள் ஆகியவற்றைச் சேகரித்து மெல்ல மெல்ல அந்தக் கிராமத்தை நகரமாக மாற்றி, அந்த நகரத்தைப் பேரரசாகச் செய்து பக்கத்து நாடுகளைப் படைகளை உருவாக்கிக் கைப்பற்றி முடிக்கும் வகையான ரியல் டைம் ஸ்ட்ராடெஜி கேம் இது. கணினிகளை இணைத்து (LAN) நெட்வொர்க்கில் விளையாட முடிவது இதன் சிறப்பம்சம். இதனால் ஒரு கணினியில் நாம் நமது நகரத்தைக் கட்டிக்கொண்டிருக்க, பக்கத்துக் கணினியில் நம் நண்பர்கள் அவர்களின் நகரங்களை உருவாக்கிக்கொண்டிருப்பார்கள். நாம் அவர்களின் மீது போர் தொடுக்கலாம். நம்மை அவர்கள் துவம்சம் செய்யலாம். எனது கல்லூரி நாட்களில் இரவு பகல் தெரியாமல் கல்லூரியின் கணினி அறையில் இதைத்தான் நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தோம் (அதற்கான சுதந்திரத்தை எங்களுக்குக் கொடுத்ததே கோவையின் CIT கல்லூரியின் சிறப்பு).
ஃபர்ஸ்ட் பெர்ஸன் ஷூட்டர் எனப்படும் கேம்களும் உருவாகின. அதாவது, நம் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்து உலவவிட்டால், நமது பார்வையில் எதிரே உள்ள உலகம் எப்படித் தெரியுமோ அதுதான் ஃபர்ஸ்ட் பெர்ஸன் ஷூட்டர். திரையில் ஒரு துப்பாக்கி நீட்டிக்கொண்டிருக்கும். அதைப் பிடித்திருப்பவர்தான் நாம். அப்படியே நகர்ந்துசென்று எல்லாரையும் ரத்தம் பீய்ச்சக் கொல்லவேண்டும்.
இதன்பின் SONY கேம்களின் உலகில் பிரவேசித்தது. ப்ளேஸ்டேஷன் எனப்படும் பிரத்யேகமான கன்ஸோல் SONYயால் உருவாக்கப்பட்டது. சில வருடங்கள் கழித்து ப்ளேஸ்டேஷனில் இரண்டாம் தலைமுறையான ப்ளேஸ்டேஷன் 2 SONYயால் உருவாக்கப்பட்டது. அதற்கும் சில வருடங்களுக்குப் பிறகு அதனை நன்றாகப் பட்டைதீட்டி SONY உருவாக்கிய கன்ஸோல் – ப்ளேஸ்டேஷன் 3. இதுதான் SONYயின் கன்ஸோல்களில் உலகப்புகழ் அடைந்தது. சென்ற வருடம் வரை உலகம் முழுதும் எக்கச்சக்கமாக விற்றுத் தீர்ந்த கன்ஸோல் இது.
SONYயின் ப்ளேஸ்டேஷன் 2ன் காலகட்டத்தில் (2001) உலகின் கணினி ஜாம்பவான் மைக்ரோஸாஃப்ட்டும் கேம்களில் முழுமூச்சாக இறங்கியது. அதுவரை SONYதான் நம்பர் ஒன். அதற்குப் போட்டியாக மைக்ரோஸாஃப்ட் இறக்கிய கன்ஸோல்தான் எக்ஸ் பாக்ஸ். ப்ளேஸ்டேஷன் இரண்டும் எக்ஸ் பாக்ஸும் நேரடியாக மோதிக்கொண்டதில் கேம் ரசிகர்களுக்கு எக்கச்சக்க கேம்கள் கிடைத்தன. வெளியே எங்கும் கிடைக்காமல் ப்ளேஸ்டேஷன் 2 வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக SONY சில கேம்களை உருவாக்கியது (அதில் இன்றுவரை பிரபலம் – God of War). அதுபோலவே எக்ஸ் பாக்ஸும் தனக்கென்றே சில கேம்களை உருவாக்கியது.
அதுவரை சற்றே சும்மா இருந்த ஆரம்பகால ஜாம்பவான் நிண்டெண்டோ, தடாலென்று தனது பிரத்யேகக் கன்ஸோலை இதன்பின்னர் 2006ல் இறக்கியது. அதன் பெயர் வீ (Wii). இதற்கு முந்தைய வருடம்தான் மைக்ரோஸாஃப்ட் அதன் எக்ஸ் பாக்ஸின் அடுத்த வடிவமான Xbox 360யை இறக்கியிருந்தது. உடனடியாக SONYயும் தனது ப்ளேஸ்டேஷன் 3ஐ 2006ல் அறிமுகப்படுத்தி, கேம் சந்தையை துவம்சம் செய்தது. அதில் ப்ளூரே டிஸ்க்குகளைப் பார்க்கவும் முடியும் என்பதால் கேமும் விளையாடி, ப்ளூரே படங்களும் பார்க்கும் ரசிகர்கள் அதனை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தனர். இந்தக் காலகட்டத்திலேயே கையில் அடக்கமாக வைத்து விளையாடும் PSP என்ற சாதனத்தையும் SONY அறிமுகப்படுத்தியது.
ஆனால் அப்போதுதான் நிண்டெண்டோவின் Wiiயும் இறங்கியிருந்தது. அதன் விலை எக்ஸ் பாக்ஸ் 360யையும் ப்ளேஸ்டேஷன் 3யின் விலையையும் விடவும் மிகவும் குறைவு. தொழில்நுட்ப ரீதியில் அவற்றுடன் போட்டியிடமுடியாவிட்டாலும் விலையை தடாலடியாக நிண்டெண்டோ குறைத்ததால் உலகின் நம்பர் ஒன் கன்ஸோலாக அது மாறியது. 2013 செப்டம்பர் வரையில் உலகம் முழுதும் நூறு மில்லியனுக்கும் மேலான கன்ஸோல்களை நிண்டெண்டோ விற்றிருக்கிறது. இது ஒரு சாதனை.
இதன்பின் சென்ற வருடத்தில் SONYயின் ப்ளேஸ்டேஷன் 4 வெளியாகிவிட்டது. கூடவே மைக்ரோஸாஃப்ட்டின் எக்ஸ் பாக்ஸ் ஒன்னும் வெளியானது. இப்போது இவைதான் உலகம் முழுதும் அதிகமாக வாங்கப்படும் கன்ஸோல்கள். இவற்றுக்குத் தகுந்த பல கேம்கள் இரண்டிலும் வெளியாகின்றன. கேம் வெறியர்கள் கொண்டாட்டமாக அவைகளை விளையாடித் தீர்க்கின்றனர்.
கேம்களைக் குழந்தைகளும் சிறுவர்/சிறுமிகளும்தான் விளையாடவேண்டும் என்ற மாயை எப்போதோ மலையேறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இப்போதெல்லாம் பெங்களூர் போன்ற நகரங்களில் கேம் போட்டிகள் வருடாவருடம் தவறாமல் நடக்கின்றன. உலகம் முழுவதிலும் கேம் வெறியர்கள் இணையத்தால் இணைகின்றனர். ஒருவரையொருவர் இந்த கேம்களின் மூலம் போட்டுத் தாக்கிக்கொள்கின்றனர் (Multiplayer mode). கேம்கள் விளையாடுவது மூளையின் creative திறனை ஊக்குவிக்கிறது என்று பல மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கருத்து சொல்லியாகிவிட்டது (ஆனால் அவர்களின் பிள்ளைகளைக் கேம்களின் பக்கம் வர விடாமல் தடுப்பதாகத் தகவல்). திரைப்படங்களில் கேம்களைக் கவனித்துக் காட்சிகளை உருவுவது சகஜமாகிக் கொண்டிருக்கிறது (வேலாயுதம் படத்தில் Assassin’s Creed கேமின் காஸ்ட்யூமை விஜய் அணிந்துகொண்டு போஸ்டர்களில் காட்சியளித்து ஃபேஸ்புக்கில் அர்ச்சனை வாங்கியது நினைவிருக்கும். ஏழாம் அறிவு படத்தில் இக்கால DNAவை வைத்துக்கொண்டு மூதாதையர்களை trace செய்வதும் அஸாஸின்’ஸ் க்ரீட் கேமில் இருந்து எடுக்கப்பட்டதே). என்னையே உதாரணமாக எடுத்துக்கொண்டால், எந்தப் பிரபல கேம் வெளிவந்தாலும் அதன் ப்ளேஸ்டேஷன் 3 டிஸ்க்கை உடனடியாக வாங்கி இரவுபகல் பாராமல் ஆடிமுடிப்பது என் வழக்கம்.
தமிழகத்தின் கல்லூரிகளில் உள்ள கணினிகளைச் சென்று பார்த்தாலே போதும்; எந்தெந்த கேம்கள் மார்க்கெட்டில் உள்ளன என்பதைத் தெரிந்துகொண்டுவிடலாம். போலவே ஆயிரக்கணக்கில் விற்கும் ஒரிஜினல் கேம்களும் இப்போதெல்லாம் ஐம்பது ரூபாய்க்கே திருட்டு டிவிடியில் கிடைக்கவும் ஆரம்பித்துவிட்டன. டாரண்ட்களாலும் கேம்கள் வேகமாகப் பரவுகின்றன. மொத்தத்தில் இன்றைய இளைய தலைமுறையின் தவிர்க்க முடியாத ஒரு பொழுதுபோக்காக கேம்கள் மாறிப் பலகாலம் ஆகிறது. இணையம், chat, ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவைகளைவிடவும் கேம்களைப் பற்றித் தெரிந்தவன் இவைகளை விளையாடித் தீர்ப்பதையே விரும்புகிறான் என்பதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
இறுதியாக, இப்படிப்பட்ட கேம்களில் பார்ட்டி கேம்ஸும் இருக்கின்றன. பார்ட்டிகளுக்குச் செல்வது, பெண்களையும் ஆண்களையும் கவர்வது போன்றதெல்லாம் இவற்றில் சாதாரணம். டேட்டிங் கேம்கள், அடல்ட்ஸ் ஒன்லி கேம்கள் போன்றவையும் ஏராளமாக உண்டு. என்னது? இவற்றில் என்ன செய்வார்களா? நீங்களே வாங்கி விளையாடிப் பாருங்களேன்.
கட்டுரையின் இணைப்பு இங்கே