அந்திமழை மே 2021 இதழுக்காக எழுதியது.
நான் சாஃப்ட்வேரில் வேலை செய்துகொண்டிருந்தபோது, பெங்களூரில், 2008ன் இறுதி மாதங்களின்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் Bigflix என்ற திட்டத்தின்கீழ், வாரம் மூன்று டிவிடிக்கள் வாடகைக்கு எடுத்துப் பார்க்கலாம். இதில் ஒரு மெம்பராக சேர்ந்து, கிட்டத்தட்ட 2011 ஜூன், ஜூலை வரை ஏராளமான படங்களை இப்படிப் பார்த்துவந்தேன். ரிலையன்ஸ் பிக்ஃப்ளிக்ஸில் இல்லாத படமே இல்லை. எந்தப் படமாக இருந்தாலும் தரமான ஒரிஜினல் டிவிடி அவர்களிடம் வந்துவிடும். எனவே பிடித்த படங்களை எடுத்துப் பார்த்துக்கொண்டு நிம்மதியாகக் காலம் கழித்த சூழல். அப்போது, 2011 ஜூலை வாக்கில், திடீரென்று, ‘சார்.. இனிமே டிவிடிலாம் கிடைக்காது’ என்றார்கள். ஏன் என்று கேட்டால், இனிமே ஆன்லைன்ல மாத்திட்டாங்க சார். நீங்க பிக்ஃப்ளிக்ஸ் வெப்சைட்ல போயி ஆன்லைன்ல லாகின் பண்ணி படம் பார்க்கலாம் சார்.. டிவிடியை விடவும் தரமான க்வாலிட்டி இருக்கும்’ என்ற பதில் வந்தது. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போதெல்லாம் வேறு எங்கும் இப்படி ஆன்லைனில் பணம் கட்டிப் படம் பார்க்கும் சர்வீஸை நான் பார்த்ததில்லை. எனவே பிக்ஃப்ளிக்ஸ் வெப்சைட்டில் லாகின் செய்து அவர்களின் படங்களை நோட்டமிட்டபோது, பல படங்கள் அதில் இல்லை என்று தெரிந்தது. அப்போதுதான் அவர்கள் ஆன்லைன் சர்வீஸை உருவாக்கிக்கொண்டிருந்த நேரம். எனவே அந்தத் திட்டத்தில் இருந்து விலகிக்கொண்டேன். எனக்குத் தெரிந்து, இந்தியாவில் OTT என்று இப்போது அழைக்கப்படும் இந்த சர்வீஸ், முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ரிலையன்ஸ் பிக்ஃப்ளிக்ஸ் மூலமாகவே என்றே நினைக்கிறேன்.
உண்மையில் இதே காலகட்டத்தில்தான் அமெரிக்காவில் நெட்ஃப்ளிக்ஸும் டிவிடிக்களை வாடகைக்கு விடுவதை நிறுத்தி, ஆன்லைனில் படம் பார்க்கவைப்பதை முயற்சி செய்துகொண்டிருந்தது. இது பின்னால் இதைப்பற்றி ஆராய்ந்தபோது தெரியவந்த விஷயம். நெட்ஃப்ளிக்ஸைப் பின்பற்றியே தனது டிவிடி வாடகை சர்வீஸை ரிலையன்ஸும் செய்துவந்தது. அதேபோல் நெட்ஃப்ளிக்ஸ் ஆன்லைனுக்கு வந்ததும் ரிலையன்ஸூம் ஆன்லைனுக்கு வந்தது. இருப்பினும் அதன்பின் நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா வந்தபோது அதனால் அடிபட்ட ஆன்லைன் ப்ளாட்ஃபாரங்களில் ரிலையன்ஸ் பிக்ஃப்ளிக்ஸும் ஒன்று, இருந்தாலும் இப்போதுவரை பிக்ஃப்ளிக்ஸ் தொடர்ந்து ஆன்லைனில் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா வந்த 2015க்குப் பிறகு ஆமெஸான் ப்ரைம், ஹாட்ஸ்டார், வூட், எராஸ், ஹங்காமா என்று இன்னும் ஏராளமான OTT சர்வீஸ்கள் நமக்குக் கிடைக்கின்றன. எனவே ஒரே நேரத்தில் பல படங்களை பல சர்வீஸ்கள் மூலம் ஆன்லைனில் பார்க்கும் வாய்ப்புகள் இப்போது எக்கச்சக்கம். இப்படி இந்தியாவில், குறிப்பாகத் தென்னிந்தியாவில், தமிழகத்தில் ஆன்லைனில் படம் பார்க்க ஆரம்பித்தபின்னர் நமது படம் பார்க்கும் ரசனை எப்படி மாறியிருக்கிறது? எப்படிப்பட்ட படங்கள் நமக்குத் தேவைப்படுகின்றன? நம் தேவைக்கேற்ற படங்கள் இப்போது ஆன்லைனில் தயாரிக்கப்படுகின்றனவா?
உலகம் முழுக்க, இன்றைய தேதியில் மிகப்பிரபலமாக இருப்பவை என்னென்ன மற்றும் 2023 வரை எவையெல்லாம் முக்கியமாக இருக்கப் போகின்றன என்று பிரபல தணிக்கை நிறுவனமான ப்ரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் (PWC) க்ளோபல் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒரு ஆராய்ச்சி அறிக்கையை 2019ல் வெளியிட்டது. இந்த அறிக்கைப்படி, விர்ச்சுவல் ரியாலிடி (VR) என்பதன்கீழ் மக்களுக்கு வீடியோக்கள், கேம்கள் ஆகிய அனுபவங்களை வழங்குவதே உலகின் மிகப்பெரிய வியாபாரமாக 2019ல் இருந்து 2023 வரை இருக்கப்போகிறது; இரண்டாவதாக, OTT. இந்தப் பட்டியலில் கடைசி மூன்று இடங்களில் இருப்பது என்ன தெரியுமா? முறையே புத்தகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் செய்தித்தாள்களும் பத்திரிக்கைகளும் (கடைசி இடம். -5 சதவிகிதம். அதாவது நஷ்டத்தில் இயங்கப்போகின்றன என்று பொருள்).
எந்தக் காலகட்டத்தையும் விட இப்போதுதான் டிஜிட்டலில் வீடியோக்கள் மற்றும் கேம்களை உலகமே வெறித்தனமாகப் பார்க்கும் காலகட்டம் எனலாம். இதனால் பல நூறு ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து படித்துவந்த செய்தித்தாள்கள் மற்றும் அச்சுப் புத்தகங்கள் ஆகியவை இப்போது பேரழிவை சந்தித்துக்கொண்டிருக்கின்றன. இதனாலேயே எந்தத் தலைமுறையையும் விட இந்தத் தலைமுறையே பொது அறிவு மற்றும் காமன் சென்ஸ் என்ற இயல்பறிவு ஆகிய இரண்டிலுமே கொடூரமான தோல்வியை சந்தித்திருக்கிறது. உலகின் பல நிறுவனங்களுமே மக்கள் எதன்பின்னால் போகிறார்கள் என்பதை வைத்தே தங்கள் வியாபாரத்தை அமைத்துக்கொள்ளும் என்பதால், இப்போது OTT முறையில் படங்கள் மற்றும் சீரியல்களைத் தயாரித்து ஒளிபரப்புவது பேய்வேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது.
இது எப்படி சாத்தியம் ஆகிறது என்றால், ஸ்மார்ட்ஃபோன்கள் பிரபலமானதால்தான் என்று அடித்துச் சொல்லலாம். இது ஆர்கானிக்காக, இயல்பாக நடந்த மாற்றம். டிஜிட்டலுக்கு உலகம் மெதுவே மாறுகையில் ஸ்மார்ட் ஃபோன்கள் வருகின்றன. அவற்றில் டிஜிட்டல் கண்டெண்ட் என்று அழைக்கப்படும் வீடியோக்கள், கேம்கள், Ebooks என்று அழைக்கப்படும் டிஜிட்டல் புத்தகங்கள் என்று எல்லாவற்றையும் ஸ்மார்ட்ஃபோனிலேயே பார்க்கும் வசதி அதிகரிக்கிறது. இதனால் படங்கள் ஆன்லைனுக்கு வருகின்றன. உடனேயே அதை வைத்துக் காசு பார்க்கும் OTT நிறுவனங்கள் உருவாகின்றன. இதனால் இதை வைத்து வளரும் தலைமுறையினர், புத்தகங்களைப் படிக்க மறுத்து, எல்லாவற்றையும் வீடியோக்கள் வாயிலாகவே தெரிந்துகொள்ள நினைக்கின்றனர். இதனால் மெல்ல மெல்ல, எழுதப்படிக்கும் திறன் மங்குகிறது. தாய்மொழியில் எழுதிப்படிக்கும் கூட்டம் குறைகிறது. இதனால் பொது அறிவு முற்றிலுமாக மறையத் துவங்குகிறது. டிஜிட்டல் படங்கள் மற்றும் வீடியோக்களால் மட்டுமே பாதிக்கப்பட்டு அவற்றில் வருவதுபோலவே மக்கள் நடந்துகொள்ள ஆரம்பிக்கின்றனர். இதுதான் டிஜிட்டலின் வளர்ச்சி. இப்படித்தான் OTT ப்ளாட்ஃபாரங்கள் வளருவதை நாம் ஆராயவேண்டும்.
குறிப்பாக, கொரோனா மூலம் சென்ற வருடம் அரசாங்கமே லாக்டவுன் அறிவிக்க, வீட்டிலேயே பல மாதங்கள் அடைந்து கிடந்த இந்தியன் (உலகனும் கூட), இருபத்து நான்கு மணி நேரமுமே கணவன், மனைவி, காதலி, காதலன் ஆகியவர்களின் முகத்தையே பார்த்துப்பார்த்து எரிச்சலாகி, வீட்டை விட்டு வெளியேறமுடியாமல் குழம்பி, என்னடா விடிவுகாலம் என்று தேடியதில் OTT முன்னால் வந்து நிற்க, அதில் தலைகீழாகக் குதித்தான் மனிதன். சென்ற ஆண்டில் மட்டும் இந்தியர்கள் பார்த்துக்குவித்த OTT படங்கள், சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மிக மிக அதிகம். இந்தியாவில் மட்டும் முப்பது சதவிகித ஏற்றம், மார்ச் 2020ல் இருந்து ஜூலை 2020ல் நிகழ்ந்தது. சென்ற வருடம் மட்டும் எத்தனை புதிய படங்கள் நேரடியாக இந்த OTT ப்ளாட்ஃபாரங்களில் வெளியிடப்பட்டன என்று யோசித்துப் பாருங்கள்? அதற்கு முன்பு இப்படி நிகழ்ந்திருக்கிறதா?
சென்ற ஆண்டு பெற்ற வளர்ச்சியை இந்த நிறுவனங்கள் விடுவதாக இல்லை. இதனால் முன்பை விடவும் ஏராளாமான புதிய தொடர்கள் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஜூனில் வெளீயாகப்போகும் ஜகமே தந்திரம் படம் வரையில் ஏராளமான படங்களை எங்கள் ப்ளாட்ஃபார்மில் முதலில் ரிலீஸ் செய்யுங்கள் என்று ஒவ்வொரு OTT நிறுவனமும் பிரபல தயாரிப்பாளர்களின் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கின்றன. உலகத்தை எடுத்துக்கொண்டாலும், மார்ட்டின் ஸ்கார்ஸேஸி, தனது மிகப்பெரிய பட்ஜெட் படமான Irishman படத்தை நெட்ஃப்ளிக்ஸில் முதன்முறையாக வெளியிட்டார். எனவே, சென்ற 2020ம் வருடமே OTT வரலாற்றில் ஒரு மைல்கல் என்று எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், உலகம் முழுக்க இப்படி அற்புதமான படங்களும் சீரீஸ்களும் OTTக்கு என்றே எடுக்கப்பட்டு வெற்றியடையும்போது, தமிழில் மட்டும் ஏன் இதுவரை குறிப்பிடத்தகுந்த ஒரே ஒரு சீரீஸோ அல்லது OTT படமோ இதுவரை வெளியாகவில்லை? ஹிந்தியில் கூட OTT சீரீஸ்கள் பல வகைகளில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கின்றன. மலையாளத்தில் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட பல படங்கள் வரிசையாக ஆன்லைனில் வெளியாகி, அவற்றில் பல படங்கள் தமிழகத்திலுமே விரும்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழில் மட்டும் ஏன் கண்டெண்ட் குறைபாடு?
தமிழில் இன்னுமே நல்ல கதைகளை வைத்துக்கொண்டு, வாய்ப்புக்காக முட்டிமோதிக்கொண்டிருக்கும் பலரை எனக்குத் தெரியும். ஆனால் இவர்களுக்குத் தொடர்ந்து இந்த OTTக்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, சராசரிக் கதைகள் வைத்துக்கொண்டு, சிலபல தொடர்புகள் மூலம் இந்த OTTக்களை அணுகும் நபர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதைக் கவனிக்கிறேன். ஒரு OTTயை நேரடியாக அணுகுவது கடினம். எனவே, இங்கேதான் aggregatorகள் என்ற இடைப்பட்ட நிறுவனங்கள் உள்ளே வருகின்றன. இவைகளின் வேலை, கதை வைத்துக்கொண்டிருப்பவர்களையும், OTT நிறுவனங்களையும் இணைத்து வைப்பது. இப்படி இந்தியாவில் பல நிறுவனங்கள் உண்டு. இந்த இடைப்பட்ட நிறுவனங்கள் உங்களிடம் கதை கேட்டு, அவர்களுக்கு அது சமீபத்திய டிரெண்டுகளை ஒத்து இருந்தால் (இவைகள், கடந்த சில மாதங்களில் எப்படிப்பட்ட படங்களோ சீரியல்களோ அதிகமாக மக்களால் OTT வாயிலாகப் பார்க்கப்படுகின்றன என்பது போன்ற சில சர்வேக்களை எடுப்பதுண்டு), உங்களை ஹாட்ஸ்டார், ப்ரைம் போன்ற OTT நிறுவனங்களிடம் கதை சொல்லச் சொல்வார்கள் (இதற்கே ஒரு மிகப்பெரிய வழிமுறை உண்டு. கதையை, பைபிள் என்று அழைக்கப்படும் டெம்ப்ளேட்டில் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். இதில் ஒவ்வொரு எபிசோடின் கதை, நடிகர்கள், லொகேஷன்கள் ஆகிய எல்லாமே இடம்பெறும்). அவர்களுக்கு அது பிடித்தால், அதன்பின் அந்த நிறுவனத்திடம் பணம் பெற்று, தங்கள் கமிஷனை அதில் எடுத்துக்கொண்டு, உங்களை அந்த சீரீஸை எடுக்கச் சொல்வார்கள். இதுதான் இந்த இடைப்பட்ட நிறுவனங்களின் பணி. இப்போது இதை நான் எழுதிக்கொண்டிருக்கும்போதே, பல அக்ரகேட்டர்கள், பல்வேறு கதைகளை இப்படிப் பரிசீலித்து வருகின்றன. அவற்றில் அரசியலும் உண்டு. ஆனால் அது எல்லாபக்கமும் எங்குமே நடப்பதே. நல்ல கதைகள் வைத்திருப்பவர்களால் இந்த இடைப்பட்ட நிறுவனங்களை நேரடியாக அணுக முடிவதில்லை என்பதைக் கவனித்திருக்கிறேன். இந்தக் குறைபாடு மட்டும் நீக்கப்பட்டால் தொடர்ந்து நல்ல சீரீஸ்கள் தமிழில் வரும்.
இதையே இன்னொரு வகையில் பேசினால், இந்தியாவின் OTTயில் யாரெல்லாம் இப்படிப்பட்ட சீரீஸ்களையும் படங்களையும் பிரத்யேகமாக OTTக்கென்றே தயாரிக்கின்றனர் என்று கவனித்தால், கிட்டத்தட்ட 20 பில்லியன் ரூபாயோடு ஆமெஸான் ப்ரைமே முதலிடம் வகிக்கிறது. Paatal Lok, Inside Edge, Mirzapur, Made in Heaven, Four more shots please, Panchayat, Family man, Bandish Bandits என்று ஏராளமான சீரீஸ்களை ப்ரைம் தயாரிக்கிறது. ஆனால் இவையெல்லாமே ஹிந்தி சீரீஸ்கள் என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். ப்ரைம் தயாரித்த தமிழ் சீரீஸ்கள் இதுவரை தோல்வியே. ஹிந்திக்கு பட்ஜெட்டைக் கொடுக்க அவர்கள் தயார். ஆனால் தென்னிந்தியாவில் அவர்களின் பட்ஜெட் மிகக்குறைவு. பிற OTTக்களுமே இப்படித்தான் தென்னிந்தியாவைப் பார்க்கின்றன. காரணம் தென்னிந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட சீரீஸ்கள் தோல்வி. இதை அவசியம் சரி செய்ய முடியும். ஆனால் அதற்கு இந்த அக்ரெகேட்டர்கள் (இடைப்பட்ட நிறுவனங்கள்) இன்னும் கொஞ்சம் தங்களின் தளர்ச்சியான செயல்பாட்டை சரி செய்ய வேண்டும்.
அடுத்ததாக, இந்த OTT ப்ளாட்ஃபாரங்கள் யாரையெல்லாம் கவர்கின்றன? அவசியம் இன்று வரை, தமிழகத்தில், தொலைக்காட்சி சீரியல்களை அன்றாடம் பார்த்து வாழும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்னுமே தொலைக்காட்சியைத்தான் பார்த்து வருகின்றனர். எப்போதாவது புதிய படங்கள் OTTயில் வெளீயானால் மட்டும் இவர்கள் OTT பக்கம் வந்து, பின்னர் தொலைக்காட்சிக்கே திரும்பிவிடுகின்றனர் என்பது தெரிகிறது. பத்தில் இருந்து 45-50 வரையான சமூகத்தையே OTT பெரிதும் நம்பியிருக்கிறது. அதிலும் குழந்தைகள். இப்போதெல்லாம் பலரின் வீட்டிலும் ஸ்மார்ட் டிவி வந்துவிட்டதால், குழந்தைகளே தங்களுக்குத் தேவையான OTT கார்ட்டூனை எளிதில் பார்க்க முடிகிறது. குழந்தைகள் கடந்த ஒண்ணரை வருடங்களாக வீட்டில் வேறு இருப்பதால் இதுதான் வழி, இதைப் பல பெற்றோர்கள் புரிந்தே இருக்கிறார்கள். 16ல் இருந்து குறிப்பாக 30 வரையிலான இளைய தலைமுறையினர் தமிழகத்தில் பார்க்காத OTT சீரீஸ்களே இல்லை என்று சொல்லலாம். வீடியோ கேம்களில் முழுமையாக ஈடுபடும் இந்தத் தலைமுறை, தங்களுக்குப் பிடித்த mind bending OTT நிகழ்ச்சிகளில் முழுமையாக மூழ்கி இருக்கின்றனர் என்பதை அவசியம் சொல்லலாம். சோஷீயல் மீடியாவில் அவர்கள் எழுதும் விமர்சனங்களே சாட்சி. இதுபோக, 30ல் இருந்து 45,50 வரையிலான வயதுகளில் இருப்பவர்கள் தொடர்ச்சியாக வீட்டில் அமர்ந்து வேலை செய்யும்போதே அவ்வப்போது OTT மூலமாகப் படங்களையும் சீரீஸ்களையும் பார்த்துக்கொண்டே வேலை செய்வதும் நன்றாகவே தெரிகிறது.
இப்படி, இந்தியர்கள் மற்றும் உலகம் முழுக்க இருக்கும் அனைத்து நாடுகளின் மக்களிடமும் OTT ப்ளாட்ஃபாரம்கள் நெருங்கிவிட்டன. நமது அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத பொருளாக, 2000ல் இருந்து மெல்ல மெல்ல செல்ஃபோன் உருவாகி இப்போது இன்னொரு விரல் போல ஆகிவிட்டதைப் போல், இப்போதே OTT உருவாகிவிட்டது. இன்னும் சில வருடங்களில் உலகையே ஆளப்போகும் பெரும் சக்தியாகவும் மாறிவிடும். இதனால் பல நல்ல சீரீஸ்களும் படங்களும் தமிழ்நாட்டின் கடைக்கோடி வீட்டுக்குள்ளும் ஸ்மார்ட்ஃபோன் மூலம் ஊடுரூவி இருப்பது பாராட்டத்தக்கதே. ஆனால் அதேசமயம், தமிழில் நல்ல சீரீஸ்கள் எடுக்கப்படவேண்டும் என்பதும் திரைத்துறையைச் சேர்ந்த எனக்கு ஒரு எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்தக் கட்டுரை மூலம் அது நடக்க ஒரு சிறிய கல்லை எறிந்ததாகவே எடுத்துக்கொள்கிறேன்.
Image source – https://dazeinfo.com/wp-content/uploads/2020/11/ott-platforms-netflix-amazon-prime-video-hoichoi-alt-balaji-sony-liv-mx-player-disney-plus-hotstar-3.jpg