ப்ரமயுகம் வெளியாகி மலையாள பாக்ஸ் ஆஃபீசை ஒரு கலக்கு கலக்கிக்கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் அட்டகாசமான விமர்சனங்கள் பெற்றுக்கொண்டு இருக்கிறது. படத்தை அனைவரும் கட்டாயம் திரையரங்குகளில்தான் பார்க்கவேண்டும் – இது OTT படம் இல்லை என்று படம் வந்த மறுநாள் பார்த்துவிட்டு எழுதியிருந்தேன். ப்ரமயுகம் எப்படி இத்தனை பெரிய வெற்றி அடைந்தது? எப்படி இந்தப் படம் மலையாள ஆடியன்சுக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது? இது ஏன் மலையாளப் படங்களில் அவசியம் க்ளாசிக் என்ற இடத்தை அவசியம் அடையப்போகிறது? எப்படி விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆஃபீசிலும் பிய்த்துக்கொண்டு ஓடுகிறது? இந்தக் கேள்விகளுக்கு மட்டும் இல்லாமல், ப்ரமயுகத்தில் சொல்லப்படும் கருத்துகள், அவைகளுக்கான பின்னணி என்ன? இன்னும் பல கேள்விகளுக்கு விடைகளை இந்தக் கட்டுரையில் கவனிக்கலாம்.
SPOILER ALERT – படத்தை நீங்கள் பார்க்கவில்லை என்றால் இந்தக் கட்டுரையில் விவாதிக்கப்படும் ஸ்பாய்லர்கள் உங்களை பாதிக்கலாம்.
முதலில், ப்ரமயுகத்தின் பின்னணி. தெற்கு மலபாரில் 17ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை இது. கேரளாவின் சரித்திரத்தில் இந்த நூற்றாண்டுக்கு ஒரு முக்கியமான பின்னணி உண்டு. இந்த நூற்றாண்டில்தான் ஐரோப்பியர்கள் கேரளாவுக்குப் படையெடுத்தது நடந்தது. வாஸ்கோ ட காமா இதற்கு முன்னரே பதினைந்தாம் நூற்றாண்டில் கேரளா வந்திருந்ததால் அதன்பின் சிறுகச்சிறுக ஐரோப்பியர்கள் வரத்துவங்கி, 1601 முதல் 1699 வரையிலான வருடங்களில் ஏராளமான ஐரோப்பியர்கள் சாரிசாரியாகக் கேரளா வந்தடைந்தனர். இவர்களில் பிரிட்டிஷ்காரர்களும் உண்டு. (வாஸ்கோ ட காமா காலத்திலேயே போர்ச்சுக்கீசியர்கள் கோட்டைகள் எல்லாம் கேரளாவில் கட்டிவிட்டனர்). கேரளாவை ஐரோப்பியர்களின் கீழ் அடிமைப்படுத்தும் வேலை இப்படியாக இந்தப் பதினேழாம் நூற்றாண்டில்தான் பெரிதும் துவங்கியது. இந்த வேலைகள் பின்னணியில் நடந்துகொண்டிருக்கும்போதுதான் ப்ரமயுகத்தின் கதை நடக்கிறது. ப்ரமயுகம் என்றால் என்ன என்று படத்தில் ஒரு இடத்தில் மம்மூட்டி சொல்வார். அதை இந்தச் சம்பவங்களுடன் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.
பிரமயுகத்தில் சொல்லப்படும் கதை என்ன?
மிக எளிமையான கதை. போர் நடப்பதால் அந்தப் போரில் இருந்து தப்பித்து ஆற்றின் அக்கரைக்கு சென்றுவிட்டால் உயிர்பிழைத்துவிடலாம் என்று ஓடிவரும் ஒடுக்கப்பட்ட சாதிகளில் ஒருவனான பாணன் ஒருவன் (கோயிலில் கடவுள் முன்னர் பக்திப் பாடல் பாடுபவன்), வழிதவறி ஒரு பழைய கால மலையாள வீட்டுக்கு (மணா என்று மலையாளத்தில் சொல்லப்படும் தோட்டம் உள்ளடக்கிய பெரிய வீடு) வந்துவிடுகிறான். அந்த வீட்டின் எஜமானன் கொடுமோன் போட்டி என்ற உயர்சாதிக்காரன். அவனுடன் ஒரு சமையல்காரனும் வசித்துவருகிறான். பாணனைப் பாடச்சொல்லிக் கேட்கும் கொடுமோன் போட்டிக்கு பாணனைப் பிடித்துவிட, இனிமேல் தன்னுடன் தங்கலாம் என்று உத்தரவிடுகிறான். ஆனால் பாணன் அங்கிருந்து சொந்த ஊருக்குப் போய்த் தனது அம்மாவுடன் வாழவேண்டும் என்று நினைக்கிறான். இருந்தாலும் ஒரு பகடை விளையாட்டில் பாணனை ஏமாற்றி, அங்கேயே இருக்கவேண்டும் என்று மறுபடி உத்தரவு இட்டுவிடுகிறான் கொடுமோன் போட்டி. அதனைத் தாண்டி பாணனால் அங்கிருந்து செல்ல முடிவதில்லை. மெல்ல மெல்ல சமையல்காரன் மூலம் கொடுமோன் போட்டியைப் பற்றித் தெரிந்துகொள்ளும் பாணன் இறுதியில் தப்பித்து வெளியேறினானா இல்லையா என்பதே ப்ரமயுகத்தின் கதை.
இந்தக் கதையை நாம் கவனித்தால், ஏற்கெனவே மம்மூட்டியின் மிகப்பெரிய வெற்றிப்படமான விதேயன் திரைப்படத்தின் கதையும் கிட்டத்தட்ட இதேதான் என்று புரியும். விதேயன் மற்றும் அதே கதையின் இன்னொரு வடிவமான பொந்தன் மாடா ஆகிய இரண்டு படங்களுக்காக அந்த வருடத்தின் தேசிய விருது மம்மூட்டிக்குக் கிடைத்தது. விதேயனில் வரும் பாஸ்கர பட்டேளர் என்ற கதாபாத்திரம் உயர்சாதித் திமிரை பார்ப்பவர்கள் அதிர்ச்சியடையும் வண்ணம் வெளிப்படுத்தும். அந்தக் கதை நடந்த காலகட்டத்தில் கேரளாவில் உயர்சாதியினர் எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களைத் துன்புறுத்தி மிருகங்கள் போல நடத்தினார்கள் என்பது விதேயனில் முகத்தில் அறையும்படி அடூர் கோபாலகிருஷ்ணனால் சொல்லப்பட்டிருக்கும்.
இந்த விதேயனின் பாஸ்கர பட்டேளர் தான் ப்ரமயுகத்தின் கொடுமோன் போட்டி. உண்மையில் அதில் வரும் பாஸ்கர பட்டேளர் போலத்தான் ஒரு நாற்காலியில் எப்போதும் அமர்ந்துகொண்டும் உலவிக்கொண்டும் பல முடிவுகளை எடுக்கிறான். அதேபோல, விதேயனில் பாஸ்கர பட்டேளரின் விசுவாசமான வேலையாளான தொம்மிக்கு பாஸ்கர பட்டேளர் மீது அளவுகடந்த விசுவாசம். இருந்தாலும் பாஸ்கர பட்டேளர் செய்யும் வேலைகள் தொம்மிக்குப் பிடிப்பதே இல்லை. இருந்தும் பட்டேளரை விட்டுப் போகமுயாத சூழல் (உயிர் போய்விடும்). இதனாலேயே இறுதியில் பாஸ்கர பட்டேளர் இறந்ததும் அங்கிருந்து தப்பித்துக் காடுகளின் இடையே மகிழ்ச்சியாக, சுதந்திரமாக ஓடிவருவான். தொம்மிக்கும் ப்ரமயுகத்தின் பாணனுக்கும் என்ன வித்தியாசம்? ஆனால் ப்ரமயுகத்தில் விதேயனின் அடிப்படைக் கதையை எடுத்துக்கொண்டு அதற்கு தொன்மம் என்று இன்னொரு வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராகுல் சதாசிவன். அது கட்டாயம் அவரது திறமைதான் என்பதில் சந்தேகம் இல்லை. சுருக்கமாக, விதேயன் இல்லாமல் ப்ரமயுகம் இல்லை.
ராகுல் சதாசிவனின் இதற்கு முந்தைய ‘பூதகாலம்’ இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டிருக்கும் அற்புதமான சைக்கலாஜிகல் திரில்லர் படங்களில் ஒன்று. அதில் வரும் அமானுஷ்ய அனுபவங்கள் கதாபாத்திரங்களுக்கு நடக்கிறதா அல்லது பிரதான கதாபாத்திரத்தின் மனப்பிரமையா என்பது ஆடியன்சுக்கு இறுதிவரை சுவாரஸ்யமாகவே சொல்லப்பட்டிருக்கும். அதில் சைக்கலாஜிகல் திரில்லர் எடுத்த ராகுல் சதாசிவன் இந்தமுறை பிரமயுகத்தில் வெளிப்படையான ஹாரர் படம் எடுத்திருக்கிறார்.
கேரளாவில் பழைய புத்தகங்களை எடுத்துப் பார்த்தால் ஒரு பெரிய வீடு சார்ந்த பேய்க்கதைகள் மிக அதிகம். அதேபோல் ஏற்றுமானூர் சிவகுமார் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய தொன்மம் சார்ந்த பேய்க்கதைகளும் அதிகம். ‘சுருளி’ படத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி எடுத்துக்கொண்ட களம் போன்றதுதான் ப்ரமயுகம். சுருளியில் வரும் இருவர் யார்? போலீஸ்காரர்கள் என்று சொல்லப்பட்டாலும் அதில் இறுதிவரை இருவரைச் சார்ந்த மர்மங்கள் பல காட்சிகளில் மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கும். அந்த கிராமத்தில் இருக்கும் மனிதர்களுக்கு ஏன் நினைவுசக்தி இல்லாமல் இருக்கிறது? அதேபோல் ப்ரமயுகத்தில் ஒரு கட்டத்துக்குப் பின்னர் பாணனுக்குத் தான் யார், தனது அம்மா பெயர் என்ன என்பதெல்லாமே எப்படி மறக்கிறது? இளைஞனாக வரும் பாணன் படத்தின் இறுதியில் நடுத்தர வயதான ஆளாக எப்படி மாறினான்? அப்படி எத்தனை நாட்கள் அந்த மனையின் உள்ளே இருந்தான்? சுருளியில் படத்தின் துவக்கத்தில் வரும் திருடன் பற்றிய கதை எதை உணர்த்துகிறது?
புதையலைக் காப்பாற்றும் பூதம் என்று ஒரு சொல்லாடல் இருக்கிறது அல்லவா? Tumbbad படத்தில் இந்தக் கருத்தை வைத்துக்கொண்டு ஒரு கதை வரும். அதேபோன்ற ஒரு கருத்தை வைத்துக்கொண்டுதான் ப்ரமயுகம் எடுக்கப்பட்டிருக்கிறது. ப்ரமயுகத்தின் ஒரு காட்சியில் ‘இந்த வீட்டின் எஜமானன் மட்டுமல்ல; இந்த வீட்டின் அடிமையும் கொடுமோன் போட்டிதான்’ என்று சமையல்காரன் சொல்வதாக ஒரு வசனம் வரும். அது ஏன் என்று படத்தில் கொடுமோன் போட்டிக்குப் பின்னான கதை வெளியாகும்போது நமக்குப் புரியும்.
கொடுமோன் போட்டி அமர்ந்துகொண்டிருக்கும் அந்த வீடு எப்படிப்பட்டது? மிகப் பழையதாக மாறி, வீட்டுக்குள் இருக்கும் பொருட்கள் எல்லாமே மக்கிப்போய், அந்த வீட்டுக்குள் ஒருவேளை நாம் நுழைந்திருந்தால் அருவருப்பில் மயங்கி விழுந்திருப்போம் என்று சொல்லக்கூடிய வகையில்தான் இருக்கிறது. சரியாகப் பராமரிக்கப்படாமல் ஒருவித அசூயை உணர்வையே ஏற்படுத்தும் வீடு அது. அதில் இருக்கும் சமையல்கூடமும் அப்படியேதான் இருக்கிறது. அங்கே சமையல்காரன் சமைக்கையிலும் சரி, உணவை கொடுமோன் போட்டியும் பாணனும் உண்ணும்போதும் சரி, பார்க்கும் நமக்கு அருவருப்பைக் கடத்தும்வகையில்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாகக் கொடுமோன் போட்டிக்கான மாமிச உணவு. இதற்கெல்லாம் காரணம் கொடுமோன் போட்டியாக இருக்கும் சாத்தன் என்பது அந்தக் கதை வெளிப்படும்போது புரிகிறது.
அதர்வண வேதத்தில் கரைகடந்த கொடுமோன் போட்டியின் வம்சத்தில் மூதாதையர் ஒருவர், வாராஹி என்ற துர்மாந்திரீகம் சார்ந்த கடவுளை வழிபட்டு ஒரு வரம் பெறுகிறார். அவரிடம் ஒரு பெட்டி வாராஹியால் அளிக்கப்படுகிறது. அதில் இருப்பது சாத்தன். அந்த சாத்தனை அடிமைப்படுத்தினால் என்ன வேண்டுமானாலும் சாத்தனின் மூலம் அடையமுடியும் என்பது கதை. அந்த சாத்தன், தன்னைக் கொடுமைப்படுத்திய மூதாதையரை வஞ்சித்து, ஏமாற்றிக் கொல்கிறது. அந்தப் பரம்பரையையே கொன்றுவிடுகிறது. அதன்பின் கொடுமோன் போட்டியின் வடிவம் எடுத்துக்கொண்டு அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறது. அந்தக் கொடுமோன் போட்டியின் வம்சத்தைச் சேர்ந்த, வேலைக்காரிக்கும் கொடுமோன் போட்டிக்கும் பிறந்த illegitimate மகன் கொடுமோன் போட்டியின் வடிவில் இருக்கும் சாத்தனுடன் சமையல்காரனைப் போல நடித்துக்கொண்டு, தக்க சமயம் வரும்போது அவனை அடிமைப்படுத்துவதற்காகவே அந்த வீட்டில் பல வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கிறான். சாத்தனுக்கு அவனது அடையாளம் புரியவில்லை. காரணம் நம்பூதிரிகளான கொடுமோன் போட்டியையும் அவனது மூதாதையர்களையும் அழித்த சாத்தன், முறைதவறிப் பிறந்த குழந்தையை மனிதனாகவே மதிக்கவில்லை. அந்தப் பக்கமே அதன் கவனம் செல்லாததால் சமையல்காரன் யார் என்றும் சாத்தனுக்குப் புரிவதில்லை. இது எல்லாமே அங்கே நிஜமாக நடந்த அநியாயங்களின் இன்னொரு வடிவமே.
உங்களது உண்மையான வடிவத்தைப் பார்க்கவேண்டும் என்று பாணன் சொல்கையில் கொடுமோன் போட்டியாகிய சாத்தன், அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று சொல்லிச் சிரிக்கிறது. படத்தின் துவக்கத்தில் இருந்தே காலம் என்ற இந்தக் கருத்து பரவலாகவே பேசப்படுகிறது. எத்தனையோ ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்து, பின்னர் அத்தனை குடும்பத்தினர்களையும் அவர்களின் வாரிசுகளையும் அழித்த சாத்தனுக்குத்தான் காலம் என்பதன் பொருள் புரியும். அந்த விலைமதிப்பில்லாத காலத்தை நீ எனக்குக் கொடு என்று சொல்லியே பாணனை அது அடிமைப்படுத்துகிறது. அதேபோல் பிராமணன் என்பவன் பிறப்பால் இல்லை; செய்யும் கர்மா என்ற தொழிலால்தான் அறியப்படுகிறான் என்றெல்லாம் கொடுமோன் போட்டியாகிய சாத்தன் சொல்வது மிகப்பெரிய வஞ்சனையின் வடிவம்தான். காரணம் கேரளாவில் அக்காலத்தில் உயர்சாதியினர் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. ஒரு நம்பூதிரியாகவே தன்னை உருமாற்ற்றிகொண்டு அமர்ந்திருக்கும் சாத்தன் இப்படிச் சொல்லியே முதலில் பாணனை உள்ளே இழுக்கிறது. பின்னர் வழக்கப்படியே அடிமைப்படுத்துகிறது.
அதேபோல், படத்தின் துவக்கத்தில் இரண்டு பேராக அறிமுகம் ஆகையில் அதில் ஒருவனை ஒரு யட்சியை வைத்துக் கொன்றுவிட்டு, தனியாளாக மாட்டிக்கொண்ட பாணனைத் தன்னிடம் வரவைத்து ஒரு சிலந்தி, தனது வலையில் சிக்கிய பூச்சியை எப்படியெல்லாம் துன்புறுத்துகிறதோ அப்படித் துன்புறுத்தி இன்பம் அடைகிறது கொடுமோன் போட்டியாகிய சாத்தன். ஒரு காட்சியில், படத்தின் துவக்கத்தில், அலைந்து திரிந்துகொண்டிருந்த பாணனுக்கு இருப்பிடம் கொடுத்து உணவும் கொடுத்த கொடுமோன் போட்டியிடம் பாணன் வந்துசேர்ந்தது கடவுளின் சித்தம் என்று பாணன் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்ல, ‘கடவுளா? நான் தானே உனக்கு உணவு கொடுத்தது? கடவுள் என்ன செய்தான்?” என்று உடனே கொடுமோன் போட்டி சொல்லும் காட்சி, பாணனைப் பற்றிய பின்னணி விபரங்களையெல்லாம் நேரில் பார்த்ததுபோலக் கொடுமோன் போட்டி சொல்வது, பின்னர் பாணனின் தாயாரிடம் சென்று சேரவேண்டும் என்ற பாணனின் ஆசை பற்றிச் சொல்வது என்பதெல்லாமே பின்னால் வரக்கூடிய சாத்தன் பற்றிய foreshadowing என்பது போகப்போகப் புரியும். வீட்டிலேயே எப்படிப் பாணன் அடைபட்டுக்கிடக்கிறானோ அப்படி சாத்தனும் அங்கேயேதான் அடைபட்டிருக்கிறது. எனவே அளவிடமுடியாத காலம் அதன் கையில் இருக்கிறது. அந்தக் காலத்தை வைத்துக்கொண்டு பிறரைத் தன்னுடைய இஷ்டத்துக்கு ஆட்டுவித்து மகிழ்கிறது.
தனது ஆணையை மீறி வெளியேற நினைக்கும் பாணனிடம், ‘இந்த மழையை மீறி எப்படிச் செல்வாய்?’ என்று கொடுமோன் போட்டி கேட்ட தருணத்தில் இருந்து பல நிமிடங்களுக்கு மழை கொட்டிக்கொண்டே இருக்கிறது. அப்போது ‘இந்த மழை சில நாட்கள் நீடிக்குமா, மாதங்களா அல்லது வருடங்களா என்பது தெரியாது. சென்றமுறை மூன்று வருடங்கள் விடாமல் பெய்தது’ என்று குரூரமாக சிரித்துக்கொண்டே கொடுமோன் போட்டி சாதாரணமாகச் சொல்வதெல்லாம் இந்தப் படத்தில் துவக்கத்தில் இருந்தே வரும் ‘காலம்’ என்பதன் நீட்சிதான். இந்த வீட்டுக்குள் வந்துவிட்டால் காலம் என்பது எப்படியெல்லாமோ வேலை செய்கிறது. பாணனுக்கு திடீரென்று வயதாகிறது. அதுவே கொடுமோன் போட்டி, க்ளைமாக்சில் வடக்கன் வீரகதா போன்ற உண்மையான கொடுமோன் போட்டியின் தோற்றத்தில் இளமையாக வருகிறார்.
தும்பாட் படத்தைப் போலவே ப்ரமயுகத்தின் இறுதியிலும் ஒரு நீதி சொல்லப்படுகிறது. இரண்டு வகையாக அதைப் புரிந்துகொள்ளமுடியும். ‘சாத்தனிடம் இருந்து நீ சக்தியை எடுத்துக்கொண்டால் எங்களைப் போன்றவர்கள் இறந்துவிடுவார்கள். வேண்டாம்’ என்று பாணன் சமையல்காரனிடம் இறைஞ்சுவது ஏற்கனவே கேரள சரித்திரத்தில் நடந்த பெரும் பிரச்னைகளை நினைவுபடுத்தாமல் இருக்காது. அதனுடன் சேர்ந்து, தீமை என்பது அழியாது; வேறு வடிவம் வேண்டுமானால் எடுக்கும் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.
எப்படி Nosferatu, Dracula போன்ற கதைகளில் மிகப்பெரிய வீட்டுக்குள் இருக்கும் எஜமானன் ஒருவன் தனது வீட்டுக்குத் தான் யாரென்று தெரியாமல் வரும் ஒரு அப்பாவியை அடிமைப்படுத்தும் கதை வருமோ அப்படியே அதே வகையைச் சேர்ந்த ப்ரமயுகமும் ஒரு க்ளாசிக் கதையைக் கையாண்டிருக்கிறது. கூடவே இன்செப்ஷன் படத்தை நினைவுபடுத்தும் காட்சி ஒன்றும் படத்தில் உண்டு. அதேசமயம் எடுத்துக்கொண்ட கரு, இதேபோன்ற இன்னொரு கறுப்பு வெள்ளைப் படமான Lighthouse படத்தை லேசாக நினைவுபடுத்தும். சரித்திர காலத்தில் நடக்கும் கதை என்பதால்தான் கறுப்பு வெள்ளை என்பதில் உறுதியாக இருந்ததாக இயகுநர் ராகுல் சதாசிவன் சொல்லியிருக்கிறார். Raging Bull எப்படிக் கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டதோ அப்படி.
சந்தோஷ் சிவன் மலையாளத்தில் ’அனந்தபத்ரம்’ என்று ஒரு படத்தை எடுத்திருக்கிறார். இந்தப் படத்திலும் தொன்மம் சார்ந்த ஒரு திகில் கதைதான் மையம். அது ஒரு நாவலில் இருந்து உருவாக்கப்பட்ட படம். இதேபோல் ஜி அரவிந்தன் எடுத்த ‘கும்மாட்டி’ திரைப்படமும் தொன்மம் சார்ந்த கதையே. ஆனால் அனந்தபத்ரம் நேரடியான திகில் படமாக இருக்க, கும்மாட்டி மிக இயல்பான, எளிமையான கதையாக இருக்கும். இதெல்லாம் நான் சொல்வதன் காரணம், மலையாளத்தில் தங்களின் வேர்களை விடாமல் படம் எடுத்துக்கொண்டே இருப்பதே. ஒவ்வொரு கதையும் வித்தியாசமாகவே இருக்கும்.
எல்லாவற்றுக்கும் மேல், திரைக்கதை சார்ந்து, ப்ளேக் ஸ்னைடர் தனது Save the Cat (திரைக்கதை என்னும் பூனை) புத்தகத்தில், மொத்தமாகப் பத்து வகைகளுக்குள் உலகின் அத்தனை படங்களயும் பிரித்துவிடலாம் என்று சொல்லி உதாரணங்கள் கொடுத்திருப்பார். அதில் Monster in the House என்பது முக்கியமான ஒரு வகை. அந்த வகையின் கீழ் கச்சிதமாகப் பொருந்தும் படமாகவும் ப்ரமயுகம் இருக்கிறது.
படத்தில் குறைகள் இல்லையா? அவசியம் உள்ளன. க்ளைமேக்ஸ் காட்சிகளில் லேசான செயற்கைத்தன்மை இருந்தது. படத்தில் யட்சி என்று ஒரு கதாபாத்திரம் எந்தவிதப் பின்னணியும் இல்லாமல் வருகிறது. சமையல்காரனுக்குப் பெரிய பின்னணி இல்லை. திடீரென்று கொடுமோன் போட்டியின் மகன் என்று அவன் சொல்லிக்கொள்ளும்போது முன்னாலேயே எதாவது foreshadowing செய்திருக்கலாமே என்று தோன்றியது. ஆனால் இவையெல்லாமே சிறிய குறைகள்தான். படம் பார்க்கும் அனுபவத்தை இவை பாதிக்கவில்லை.
தற்காலத்தில் வந்திருக்கும் மிக அருமையான படமாக ப்ரமயுகம் மாறியிருக்கிறது. கேரளாவில் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவசியம் இது ஒரு முக்கியமான படமும் கூட. படத்தைப் பாருங்கள். அது உங்களுக்குப் பிடிக்காமல் ஒருவேளை போனாலும் பார்க்காமல் இருக்கவேண்டாம். ஆங்கிலத்தில் Mike Flanagan எப்படி ஹாரரில் முக்கியமான ஒரு இயக்குநராகத் திகழ்கிறாரோ, அப்படி அந்தப் பாதையில் ராகுல் சதாசிவன் செல்லத் துவங்கியிருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
பி.கு – Jump Scareகளை எதிர்பார்த்து இந்தப் படத்துக்குச் செல்லவேண்டாம். இது அப்படிப்பட்ட படம் இல்லை.